திருவான்மியூர், அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் புதிய தேரினை பாதுகாத்திடும் வகையில் தேர் கொட்டகை அமைக்க அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: திருவான்மியூர், அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் புதிய தேரினை பாதுகாத்திடும் வகையில் தேர் கொட்டகை அமைக்க அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருவான்மியூர், அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயிலின் புதிய திருத்தேரினை பாதுகாத்திடும் வகையில் புதிய தேர் கொட்டகை அமைத்திட அறிவுரைகள் வழங்கினார்.

சென்னை, திருவான்மியூரில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்பு பெற்றதாகும். இத்திருக்கோயிலின் சுவாமி மற்றும் அம்மன் வீதிஉலா வருவதற்காக புதிய திருத்தேர் செய்திட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவுரைகள் வழங்கியதின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய அனுமதிகள் பெறப்பட்டன. உபயதாரர் எஸ்.ராஜப்பன் ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் செய்து வழங்கியதை தொடர்ந்து நேற்றைய தினம் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இன்று (14.03.2023) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருவான்மியூர், அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயிலுக்கு வருகை தந்து புதிய திருத்தேரினை பார்வையிட்டு, அதனை பாதுகாத்திடும் வகையில் புதிதாகத் தேர் கொட்டகை அமைப்பதற்கும், திருக்கோயில் முன்புறமுள்ள காலியிடத்தினை சுத்தம் செய்து சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள்  வழங்கினார்.  

இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் சு.ராஜாஇளம் பெருவழுதி,  உபயதாரர் எஸ்.ராஜப்பன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: