×

‘திருந்திட்டேன்... என்னை தேடாதீங்க...’ ‘கஞ்சா தமன்னா’ வீடியோ வைரல்

கோவை :  ‘திருந்திட்டேன்... என்னை தேடாதீங்க...’ என ‘கஞ்சா தமன்னா’ வீடியோ வைரலாகியுள்ளது.கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் (25). கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டில் ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் (22) என்பவர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு பழி வாங்க கோகுல் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் குரங்கு ஸ்ரீராம் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த முக்கிய குற்றவாளிகள் குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது ரத்தினபுரியில் வசித்து வந்த தமன்னா என்கிற வினோதினி (25) என்பவர் குறித்த தகவல் கிடைத்தது. இவர் பீளமேடு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக கைது செய்யப்பட்டார். இவரை போலீசார் கைது செய்தனர். சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த இவர் மேலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இவர் சமூக வலைதளங்களில்  பல்வேறு ஆட்சேபகரமான வீடியோக்கள், ஆயுதங்களுடன் காட்சி தந்த வீடியோக்கள் வெளியிட்டார்.

போத்தனூரை சேர்ந்த ரவுடி விக்கு சண்முகம் என்பவருக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா வெளியிட்டார். கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அவர் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பரவியது. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் இவரை விருதுநகரில் தேடி வந்த நிலையில், இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார்.

அந்த வீடியோவில், ‘‘நான் 2 ஆண்டிற்கு முன்புதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தேன். டிரண்ட் ஆகும் நோக்கத்தில் அதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டேன். அதற்கு பிறகு போலீசார் என்னை கஞ்சா வழக்கில் கைது செய்தனர். சிறைக்கு சென்று நான் வெளியே வந்தேன். அதற்கு பிறகு நான் எந்த ஆட்சேபகரமான வீடியோக்களையும் வெளியிடவில்லை. ஆனால் போலீசார் என்னை தேடுகிறார்கள்.

நான் இப்போது திருமணம் செய்து என் கணவருடன் வாழ்க்கை நடத்தி வருகிறேன். 6 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எந்த வீடியோவும் நான் போடவில்லை. வீடியோ போட்டபோது என தலை கேசத்தை வெட்டியிருந்தேன். இந்த வீடியோக்களை பார்த்தால் தெரியும். திருந்தி வாழும் நிலையில் போலீசார் என்னை தேட வேண்டாம்’’ என அவர் வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோ இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வைரலாக பரவியது. ‘‘போலீஸ் தேடறப்ப.. நீ எங்கம்மா ஒளிஞ்சிருக்கே...’’ என இவரது வீடியோவிற்கு ஒருவர் கமெண்ட் போட, அதற்கு தமன்னா, ‘‘நான் வீட்டில்தான் இருக்கிறேன். எங்கேயும் ஓடி போகலை’’ என பதில் போட்டிருக்கிறார். வேறு சிலர், ‘‘நாம் திருந்தி இருந்தா நம்மள சும்மா விட மாட்டீங்கிறாங்க’’ என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.


Tags : Coimbatore: The video of 'Ganja Tamanna' has gone viral saying 'I'm tired... don't look for me...' Rowdy Gokul (25) from Keeranatham area of Coimbatore.
× RELATED கேரள பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற...