×

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஆட்டோ டிரைவர்கள் உட்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி

கோவை :  கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் உட்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை போலீசார் தீவிர சோதனை செய்த பின் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் உள்ளே அனுமதித்து வந்தனர். இதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் 3 ஆட்டோவில் வந்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் திடீரென தங்களது உடலில் மண் எண்ணெய் ஊற்றி ஒருவர் பின் ஒருவராக தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களது கையில் இருந்த கேனை பிடுங்கி எறிந்தனர். அப்போது மீண்டும் ஒரு பெண் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவரது கையில் இருந்த கேனையும் பறித்து 4 பேரையும் பாதுகாப்பாக போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். விசாரணையில், தீக்குளிக்க முயன்றவர்கள் துடியலூர் அண்ணா காலனியை சேர்ந்த ஆனந்தகுமார், அஷார், ரகு மற்றும் ஆனந்த குமாரின் தாய் லட்சுமி என்பது தெரியவந்தது. இது குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர் ஒருவர் கூறியதாவது:

துடியலூர் அண்ணா காலனியில் ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், ரகு, அசார் ஆகியோர் சில ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்தி சவாரி சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒராண்டாக அதே பகுதியை சேர்ந்த சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் 3 பேர் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கோரி அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தபோது தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் கருதி அவர்களது பிரச்னையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Cove , Coimbatore: Four people, including auto drivers, tried to set fire in front of the Coimbatore collector's office. Coimbatore
× RELATED ஜார்ஜியா மாகாண செனட் சபை தேர்தல்: தமிழர் அஸ்வின் ராமசாமி போட்டி