பாங்க் ஆப் பரோடா வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி 8.50 சதவீதமாக குறைப்பு

சென்னை: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடா வங்கி, வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) குறைத்து, ஆண்டுக்கு 8.50%* ஆக நிர்ணயிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், எம்.எஸ்.எம்.இ.களுக்கான கடன் வட்டி விகிதங்களையும் ஆண்டுக்கு 8.40%* ஆக குறைத்துள்ளது. இந்த 2 வரையறுக்கப்பட்ட சலுகைகளும் மார்ச் 31ம் தேதி வரை கிடைக்கும்.

வட்டி விகிதங்களை குறைப்பதுடன், வீட்டுக் கடன்களுக்கான பிராசஸிங் கட்டணங்களில் 100% தள்ளுபடியையும், எம்.எஸ்.எம்.இ.களுக்கான கடன் சார்ந்த பிராசஸிங் கட்டணங்களில் 50% தள்ளுபடியையும் வங்கி வழங்குகிறது. ஆண்டுக்கு 8.50%* என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கடன் விகிதமானது புதிய வீட்டுக் கடன்கள் மற்றும் வீட்டு மேம்பாட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிப்போருக்கு கிடைக்கும்.

இதுகுறித்து பாங்க் ஆப் பரோடா எக்ஸிகியூடிவ் டைரக்டர் அஜய் கே குரானா கூறுகையில், ‘‘வட்டி விகிதங்கள் கணிசமாக உயர்ந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் இச்சலுகை மூலம் வீடு வாங்க ஆகும் செலவு கணிசமாகக் குறையும். எம்.எஸ்.எம்.இ துறைக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பது ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து அவர்கள் மேம்பட வழிவகுக்கும். பாப் வேர்ல்ட் மொபைல் பேங்கிங் செயலி மூலமோ, வங்கியின் இணையதளத்தின் மூலமோ வாடிக்கையாளர்கள் 30 நிமிடங்களுக்குள்* வீட்டுக் கடனுக்கு டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதும் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளைகளில் ஏதேனும் ஒன்றை அணுகியும் கடன் விண்ணப்பத்தை வழங்கலாம்,’’ என்றார்.

Related Stories: