×

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நல பணிக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: கலெக்டருக்கு எம்பி கடிதம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நல பணிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.1 கோடியே 99 லட்சத்து 99 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு, ஸ்ரீபெரும்புத்தூர் எம்பி டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்காக ரூ.1 கோடியே 99 லட்சத்து 99 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், மதுரவாயல் சட்டமன்ற தொகுதியின் 5 இடங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்திட ரூ.24 லட்சத்து 40 ஆயிரமும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் சிவன்கூடல் ராமானுஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டிடங்கள் அமைத்திட ரூ.18 லட்சத்து 79 ஆயிரமும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் மாங்காடு நகராட்சி, மேல்ரகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் பட்டூர் பகுதியில் ரேஷன் கடைக்கான கட்டிடம் அமைத்திட ரூ.30 லட்சத்து 80 ஆயிரமும், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 81வது வார்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் கொரட்டூர் 84வது வார்டில் அமைந்துள்ள ருக்மணியம்மாள் தெருவில் அங்கன்வாடி மையக் கட்டிடம் அமைத்திட ரூ.62 லட்சமும், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 இடங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்திட ரூ.64 லட்சம் என நிதி ஒதுக்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு, முன்னர் இதே நிதியாண்டில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள், மாநகராட்சி பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.2 கோடியே 90 லட்சத்து ஆயிரம் ஒதுக்கீடு செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு கடிதங்கள் அனுப்பி, அதன்பேரின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிதியாண்டில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் ரூ.4 கோடியே 90 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Sriperumbudur , Rs 2 crore should be allocated for public welfare work in Sriperumbudur parliamentary constituency: MP letter to Collector
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...