துபாய்: நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியஷிப் தொடரின் பைனலில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. இந்தியாவுடன் இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், அகமதாபாத் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது. அந்த போட்டியில் இந்தியா டிரா அல்லது தோல்வி கண்டு, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றினால் அந்த அணி பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பும் இருந்தது.
அகமதாபாத் டெஸ்ட் டிராவில் முடிந்தாலும், பரபரப்பான கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியதால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து, கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. டேரில் மிட்செல் 81 ரன், கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 121 ரன் விளாசி வெற்றிக்கு உதவினர். இலங்கை 355 மற்றும் 302; நியூசிலாந்து 373 & 285/8. நியூசிலாந்துடன் நடக்கும் 2வது டெஸ்டில் இலங்கை வென்றாலும், அந்த முடிவு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி தொடங்குகிறது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங்
ரேங்க் அணி சதவீதம் புள்ளி தொடர் வெற்றி டிரா தோல்வி
1 ஆஸ்திரேலியா 66.67 152 6 11 5 3
2 இந்தியா 58.80 127 6 10 3 5
3 தென் ஆப்ரிக்கா 55.56 100 6 8 1 6
4 இலங்கை 48.48 64 6 5 1 5
5 இங்கிலாந்து 46.97 124 6 10 4 8
6 பாகிஸ்தான் 38.1 64 6 4 4 6
7 வெஸ்ட் இண்டீஸ் 34.62 54 6 4 4 6
8 நியூசிலாந்து 33.33 48 6 3 3 6
9 வங்கதேசம் 11.11 16 6 1 1 10
