×

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கடைசி பந்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி: டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன், நியூசிலாந்து 373 ரன் எடுத்தன. 18 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணியில் மேத்யூஸ் தனது 14வது டெஸ்ட் சதம் அடித்தார். அவர் 115, சன்டிமால் 42, தனஞ்ஜெயா டி சில்வா 47 ரன் எடுக்க 105.3 ஓவர்களில் 302 ரன்னுக்கு இலங்கை ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலர்கள் பிளேர் டிக்னெர் 4, மேட் ஹென்றி 3 , டிம் சவுதி 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 285 ரன் இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் டிவான் கான்வேயின் 5ரன்னில் அவுட் ஆனார். நேற்றைய 4ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 17 ஓவரில் 28 ரன் எடுத்திருந்தது. டாம் லதாம் 11 , கேன் வில்லியம்சன் 7 ரன்னில் களத்தில் இருந்தனர்.

கடைசி நாளான இன்று வெற்றிக்கு 255 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் தாமதமானது. சுமார் 3.30 மணி நேர தாமதத்திற்கு பின் 53 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லதாம் 25 ரன்னில் வெளியேறினார்.பின்னர் வந்த ஹென்றி நிக்கோலஸ் 20 ரன்னில் ஜெயசூர்யா பந்தில் அவுட் ஆனார் . அடுத்து டேரில் மிட்செல் களம் இறங்கினார். அதுவரை டிராவில் முடியும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மிட்செல் அதிரடியால் தலைகீழாக மாறியது. அவர் 86 பந்தில், 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன் எடுத்தார். அப்போது நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 232 ரன் எடுத்திருந்தது.
பின்னர் வந்தடாம் ப்ளன்டெல் 3, மைக்கேல் பிரேஸ்வெல் 10 ரன்னில் வெளியேற மறுபுறம் தனிநபராக போராடிய வில்லியம்சன், டெஸ்ட்டில் தனது 27வது சதத்தை விளாசினார். கடைசி 2 ஓவரில் 15 ரன் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் சவுத்தி, ஒருரன்னில் வெளியேறினர்.

அந்த ஓவரில் 7 ரன் அடிக்க கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்டது. அசித்த பெர்னாண்டோ வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்தில் தலாஒரு ரன் அடித்த நிலையில் 3வது பந்தில், மேட் ஹென்றி 2வது ரன்னுக்கு ஓடியபோது ரன்அவுட் ஆனார். 4வது பந்தில் வில்லியம்சன் பவுண்டரி விரட்ட ஸ்கோர் சமன் ஆனது. 5வது பந்து டாட் பாலாக அமைய ஆட்டத்தில் திக்..திக்.. நிலை ஏற்பட்டது. கடைசி பந்தை வில்லியம்சன் தவறவிட லெக் பைசாக ஓடி ரன்அவுட்டில் இருந்து தப்பி ஒருரன் எடுத்தார். முடிவில் 70 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 285ரன் எடுத்த நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டம் இழக்காமல் வில்லியம்சன் 121 ரன் (194பந்து, 11பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். முதல் இன்னிங்சில் 102, 2வது இன்னிங்சில் 81 ரன் எடுத்த மிட்செல் ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்தின் இந்த வெற்றி மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு தகுதி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி தொடங்கி நடைபெறும் பைனலில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளது. முதல் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : New Zealand ,Sri Lanka ,India ,Test Championship , New Zealand thrash last-ball 1st Test against Sri Lanka: India qualify for Test Championship final
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்