×

வாழை சாகுபடியில் சவால்கள், லாபம் ஆராய்ச்சியாளர்களுக்கு தஞ்சாவூர் விவசாயி விளக்கம்-குறிப்பெடுத்து கொண்ட வெளிநாட்டினர்

தஞ்சாவூர் : வாழை சாகுபடியில் எதிர்கொள்ளும் சவால்கள், லாபங்கள் மற்றும் பயன்கள் குறித்து தஞ்சாவூரை சேர்ந்த முன்னோடி விவசாயிடம் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கேட்டறிந்து குறிப்பெடுத்து கொண்டனர்.திருச்சியை அடுத்த தாயனுாரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், வெப்ப மண்டல வேளாண்மைக்கான சா்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து, வாழை ஆராய்ச்சி மையத்தில் 5 நாட்கள் சா்வதேச கருத்தரங்கை நடத்தியது. இதில் இந்தியா, பிரான்ஸ், பெல்ஜியம், இந்தோனிஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 18 வாழை ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக, தேசிய வாழை ஆராயச்சி மைய முதன்மை விஞ்ஞானி ரவி, தொழில்நுட்ப அலுவலர் காமராஜ் ஆகியோர் தலைமையில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வடுக்குடியை சேர்ந்த முன்னோடி வாழை விவசாயி மதியழகன் என்பவர் தோட்டத்தில் வாழை சாகுபடியில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவசாயிடம் கேட்டனர்.

ஆராய்ச்சியாளர்களிடம், விவசாயி மதியழகன் கூறுகையில், வாழை லாபமும், மருத்துவ குணமும் கொண்ட ஒரு பயிர். வாழை தண்டு கிட்னியில் ஏற்படும் கல் தாக்குதலை குணப்படுத்தும், வாழை பூவில் பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கலாம். வாழையில் பூவம் ரகத்தின் பழம், இலை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் சத்தும், ஆரோக்கியமும் கொண்டது. மேலும், வாழை இலையின் பயன்பாடும், பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை சீற்றங்கள், அதிலிருந்து வாழைத் தார், வாழை மரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும், வாழைக்கு தேவையான உரங்கள், அதற்கு தேவையான நுண்ணுட்ட சத்துக்கள் குறித்தும் விளக்கமளித்தார். அப்போது ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விவசாயி மதியழகன் விளக்கமளித்தார். இதனை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து முதன்மை விஞ்ஞானி ரவி நிருபர்களிடம் கூறுகையில், நமது நாட்டில் வாழையில் இலை முதல் தண்டுவரை முழுமையாக பயன்படுத்துகிறோம். வெளிநாடுகளில் அதிகளவில் பழங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர். மேலும், இங்குள்ள வாழை சாகுபடியில் கையாளும் முறைகள், பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் எப்படி சமாளிக்க வேண்டும் உள்ளிட்டவைகளை தெரிந்து கொண்டு, அவர்களின் நாட்டில் வாழை விவசாயிகளிடம், இங்குள்ள முறைகள் குறித்து கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்றார்.

Tags : Thanjavur , Thanjavur: A pioneer farmer from Thanjavur on the challenges, benefits and benefits of banana cultivation
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...