×

திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மும்முரம்-கடந்த ஆண்டு கூடுதல் மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் ஆர்வம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பருத்தி பயிருக்கு வழக்கத்தை விட கூடுதலான அளவில் விலை கிடைத்ததால் நடப்பாண்டில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற் கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரியநீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்நிலை யில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணையானது ஜுன் 12ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் கடந்தாண்டு வரலாற்றில் இல்லாத வகையில் மே மாதம் 24ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப் பட்டது. இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்திலும், வரலாற்றில் இல்லாத வகையில் முன் கூட்டியும் திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத் தை விட கூடுதலான அளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும் முரமாக மேற்கொண்டனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வழக்கமான சாகு படி பரப்பளவை விட கூடுதலாக 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு என மொத்தம் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி மேற்கொண்ட நிலையில் கடந் தாண்டு அதை விட கூடுதலான பரப்பளவாக மொத்தம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடை பெற்றது.
அதேபோல் சம்பா சாகுபடியும் நடைபெற்ற நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 3 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று தற்போது வரையில் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர். அதன்படி, நெல் சாகுபடி யடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மர வள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக கடந்தாண்டில் இந்த பருத்தி பயிர் இருமடங்கை விட கூடுதலான அளவில் அதாவது 40 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த நிலையில் பின்னர் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டன.

அதன்படி கடந்தாண்டு அதற்கு முன்னதாக இல்லாத வகையில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 12 ஆயிரம் வரையில் விலை கிடைத்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனையடுத்து கடந்தாண்டில் கிடைத்த நல்ல விலையினை கருத்தில் கொண்டு நடப்பாண்டிலும் இந்த பருத்தி பயிர் சாகுபடியில் விவசாயிகள் தற்போதே மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதன்படி நடப்பாண்டு திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Tiruvarur district , Tiruvarur: In Tiruvarur district, the price of cotton crop was higher than usual last year.
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...