×

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாதை சீரமைப்பு-சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது

நாகர்கோவில் : சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாதை சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலயசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு சேர அருள்பாலிக்கிறார்கள். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான திருக்கோயில் ஆகும்.

இந்த கோயிலில் மார்கழி திருவிழா தேரோட்டம், சித்திரை திருவிழா தெப்போற்சவம், ஆவணி மாத தேர் திருவிழா, மாசி மாதம் திருக்கல்யாண திருவிழா உள்ளிட்டவை விஷேசமானதாகும். இந்த கோயில் அருகில் பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் தண்ணீர் பராமரிப்பின்றி போனதால், தற்போது நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த தெப்பக்குளத்தில் தான் சித்திரை திருவிழாவின் போது தெப்போற்சவம் நடைபெறும். இந்த தெப்பக்குளத்துக்கு பழையாற்றில் இருந்து தண்ணீர் வரும் வகையில் மன்னர் காலத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழன்திட்டை அணையில் இருந்து தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வருவதற்காக பூமிக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

சோழன் திட்டை அணையில் இருந்து நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை வரை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. பின்னர் சாலையின் குறுக்கே பூமிக்கு அடியில் கற்கள் வைத்து கட்டி கால்வாய் அமைக்கப்பட்டு இருக்கிறது. பின்னர் சாலையின் வலது புறத்தில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, தெப்பக்குளம் வரை தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

மன்னர் காலத்திலேயே நவீன தொழில் நுட்பத்துடன் இவை அமைக்கப்பட்டுள்ளன. குழாயில் அடைப்புகள் ஏற்பட்டால் அதை சரி செய்யும் வகையில் மொத்தம் 18 இடங்களில் திறந்து மூடும் வகையில் மேன்ஹோல் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையில் இருந்து 10 அடி ஆழம் வரை தோண்டி குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் கோயில் நுழைவு வாயில் ஆர்ச் வரை கற்கள் வைத்து கட்டி குழாய் பதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தெப்பக்குளம் வரை கான்கிரீட் கால்வாய் (பாக்ஸ் வடிவில்) அமைக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாய்க்குள் இறங்கி தெப்பக்குளம் வரை நடந்து செல்ல முடியும். அந்த வகையிலான தொழில் நுட்பத்துடன், மன்னர் காலத்தில் அமைத்துள்ளனர்.

தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் குழாய் மற்றும் கால்வாய் சுமார் 100 ஆண்டுகளாக சீரமைக்கப்பட வில்லை. இதனால் சேறும், சகதியுமாக நிறைந்து தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வருவது குறைந்து போனது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், பிரசித்தி பெற்ற கோயில்களில் உள்ள பழமையை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை  மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையையும் சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் கவனத்துக்கு குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் இது தொடர்பான கோரிக்கையை கொண்டு சென்றார். இதையடுத்து ₹8.90 லட்சம் செலவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் மேற்பார்வையில் தற்போது இந்த பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

சோழன் திட்டை அணையில் இருந்து தெப்பக்குளம் நோக்கி தண்ணீர் வருவதற்காக சில அடி தூரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இது முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதியில் உள்ள கல் கட்டு தளம்  பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேன்ஹோல் பகுதியில்  ஆட்கள் உள்ளே இறங்கி அடைப்பை சரி செய்யும் வகையில் படிக்கட்டுகள் உள்ளன.

அதன் மூலம் தற்போது பணியாளர்கள் இறங்கி சகதிகளை அகற்றி வருகிறார்கள். மொத்தம் 18 மேன்ஹோல்கள் உள்ளன. அதில் இதுவரை 3 மேன்ஹோல்கள் திறக்கப்பட்டு உள்ளே இறங்கி சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகமாக உள்ளதால், மேன்ஹோல்களை திறப்பதிலும் சிக்கல் உள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீரை குறைக்கும் பணிகள் நேற்று நடந்தன. ஏப்ரல் 21ம் தேதி சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதற்குள் பணிகளை முடிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
 
சுசீந்திரம் கோயில் பக்தர்கள் கூறுகையில், சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றி கூறிக்ெகாள்கிறோம். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாத கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது. சீரமைப்பு பணிக்காக ₹8.90 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர். முழுமையாக சீரமைக்க இன்னும் கூடுதல் நிதி தேவைப்படும். எனவே அதற்கேற்பே கூடுதல் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி தர வேண்டும் என்றனர்.

மெய் சிலிர்க்க வைக்கும் கட்டிட பணி

இது குறித்து சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவா என்பவர் கூறுகையில், தெப்பக்குளம் கால்வாய் சீரமைக்கப்பட்டு 100 ஆண்டுகள் வரை ஆகி உள்ளன. பூமிக்கு அடியில் அந்த காலத்திலேயே நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட கால்வாயை பார்க்கும் வாய்ப்பு இந்த தலைமுறைக்கு கிடைத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பூமிக்கு அடியில் நடந்துள்ள அந்த கால கல் கட்டிட வேலைகள் மெய் சிலிர்க்க வைக்கிறது என்றார்.



Tags : Suseendram Thanumalayaswamy ,Temple ,Theppakulam Water Supply Road , Nagercoil: Susinthram Thanumalayaswamy Temple Theppakulam water route is now running after about 100 years.
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...