ஆர்சிபி அணிக்காக விளையாடுவதே ஆசை; 10.75 கோடிக்கு வாங்கப்படுவேன் என்று நினைக்கவில்லை: ஹர்சல் படேல் பேட்டி

பெங்களூரு:ஆர்சிபி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் கூறியதாவது:-

2021ம் ஆண்டில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தேன். அதனால் மெகா ஏலத்தின் போது ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை ஏலத்தில் வாங்கப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன். பலரும் என்னிடம் ஏலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கேட்டார்கள். அவர்களிடமும் அதே பதிலை தான் கூறினேன். ஏனென்றால் என்னை போன்ற வீரர்களுக்கு கடந்த சில ஏலங்களில் அந்த தொகை தான் அணிகளால் வழங்கப்பட்டிருந்தது. அதனால் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளாமல் சிறிய எதிர்பார்ப்போடு தான் இருந்தேன்.

 

ஆனால் என்னை சுற்றி இருந்த நண்பர்கள் இரட்டை இலக்க தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்றனர். ஆர்சிபி அணிக்காக ஆட வேண்டும். ஆனால் அவர்களை நான் நம்பவில்லை. ஆனால் ஏலத்தின்போது ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் எனக்காக வேகமாக போட்டிபோட்டார்கள். ஒரு கட்டத்தில் ரூ.10.75 கோடியை ஏலத்தொகை எட்டும்போது, வேறு யாரும் ஏலம் கேட்ககூடாது என்று வேண்டினேன். ஏனென்றால் எனக்கு ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்பதே ஆசை. அந்தப் பணம் என் வாழ்க்கைக்கு அதிக அளவில் பயன்பட்டது.

 

பணம் தான் நமது வாழ்க்கைக்கு சுதந்திரத்தையும், சில வாய்ப்புகளையும் கொடுக்கும். இதற்கு பின் நான் இதே தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவேனா என்பது தெரியாது. அதேபோல் என் வாழ்க்கைக்கு அவ்வளவு பணம் தேவையும் இல்லை. ஆனால் வாழ்க்கையின் சுதந்திரத்திற்கு பணம் தான் முக்கியமான கருவி. அப்படிதான் நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: