×

ஹோலி கொண்டாட்டத்தில் அத்துமீறல் ஜப்பான் பெண் சுற்றுலா பயணி இந்தியாவை விட்டு வெளியேறினார்: டெல்லியில் 3 பேர் அதிரடி கைது

புதுடெல்லி: டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஜப்பான் பெண் சுற்றுலா பயணியிடம் வண்ணப்பொடிகளை பூசி அத்துமீறலில் ஈடுபட்டதோடு அவரது தலையில் முட்டை உடைத்து தொல்லை தந்த சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 8ம் தேதி ஹோலி கொண்டாடப்பட்டது. சாலைகளில் சென்றவர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவி ஏராளமானவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பஹர்கஞ்ச் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஜப்பான் பெண் சுற்றுலா பயணி ஒருவர் வந்தார். அவரை வழிமறித்த கும்பல் வண்ணப்பொடிகளை உடலில் பூசுவதாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது தலையில் முட்டையை உடைத்து அவரை துன்புறுத்தி உள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சம்பவம் குறித்து ஜப்பான் சுற்றுலா பயணி, காவல்நிலையத்தில் புகார் தரவில்லை, டெல்லி போலீசாரை அழைக்கவில்லை, தூதரகத்தை அணுகவில்லை. ஆன்லைன் புகாரும் தரவில்லை. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ அடிப்படையில் போலீசார் தாமே முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ ஆதாரம் அடிப்படையில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனிடையே சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணி வங்கதேசம் சென்றுவிட்டதாகவும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நன்றாக இருப்பதாகவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு டெல்லி போலீசாருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags : India ,Delhi , Violation of Holi celebration Japanese tourist leaves India: 3 arrested in Delhi
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...