எனக்கும் சிறுவயதில் ‘அந்த’ தொல்லை: டெல்லி மகளிர் ஆணைய தலைவி அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: சிறுமியாக இருந்த போது எனது தந்தை  பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்ற அதிர்ச்சி தகவலை டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் நடிகையும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு 8 வயதாக இருந்த போது தனது தந்தை  பாலியல் தொல்லை கொடுத்தார். 15 வயது ஆன போது அவரை எதிர்க்கும் துணிச்சல் வந்தது என தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லியில் சர்வதேச மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘நான் சிறுமியாக இருந்த போது என் தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் 4ம் வகுப்பு படிக்கும் வரை இந்த கொடுமை நடந்தது. அவர் என்னை அடிப்பார். எனது தலைமுடியை பிடித்து இழுத்து சுவரில் தள்ளுவார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தினாலும் தாக்குவதை நிறுத்தமாட்டார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்வேன். அப்போது, இது போன்று குழந்தைகள்,பெண்களை தாக்கும் ஆண்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தேன். பெண்களுக்கு எவ்வாறு அவர்களின் உரிமைகளை பெற்று தருவது என சிந்திப்பேன்’’ என்றார்.

Related Stories: