×

அதிபர் ஜின்பிங் விசுவாசி சீனாவின் புதிய பிரதமராக லீ கியாங் நியமனம்

பெய்ஜிங்:  சீனாவின் புதிய பிரதமராக லீ கியாங் நியமிக்கப்பட்டுள்ளதாக சீன நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. சீனாவில் பிரிமீயர் என்று அழைக்கப்படும் அதிகாரம் மிக்க இரண்டாவது பெரிய பதவியாக பிரதமர் பதவி உள்ளது. இது பெயரளவில் பெரிய பதவி என்றாலும், அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடம்தான் இருக்கிறது. இந்நிலையில், சீனாவின் பிரதமராக கடந்த 10 ஆண்டுகாலம் பதவி வகித்து வந்த லீ கெகியாங்கின் பதவிக்காலம் முடிவடைந்தது.  புதிய பிரதமராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விகளுக்கிடையே, அதிபர் ஜி ஜின் பிங்கின் விசுவாசியான லீ கியாங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. அந்த கூற்றுகளை உண்மையாக்கும் வகையில், சீனாவின் அதிகாரம் மிக்க இரண்டாவது பெரிய பதவியான பிரதமர் பதவிக்கு ஷாங்காய் கட்சியின் செயலாளரான 63 வயதான லீ கியாங் நியமிக்கப்பட்டு உள்ளார்.


சீன நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட 2 ஆயிரத்து 947 உறுப்பினர்களில் 2 ஆயிரத்து 936 பேர் லீ கியாங்குக்கு ஆதரவாகவும், 3 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 8 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்து லீ கியாங் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆணையில் அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டார். சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது. மேற்கத்திய நாடுகளுடனான மோதல் போக்கு ஆகியவற்றால் சீன பொருளாதாரம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை மீட்டெடுக்கும் விதமாக அதிபரின் நெருங்கிய நண்பரும், புதிய பிரதமருமான லீ கியாங் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : President Xi Jinping ,Li Keqiang ,China , President Xi Jinping loyalist Li Keqiang appointed as China's new prime minister
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...