மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டியில், உ.பி. வாரியர்ஸ் அணிக்கு 139 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிராபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சோபி டிவைன் உடன் இணைந்து இன்னிங்சை தொடங்கிய அவர் 4 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அடுத்து சோபி டிவைனுடன் எல்லிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தனர். டிவைன் 36 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி எக்லஸ்டோன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுக்க, கடுமையாகப் போராடிய எல்லிஸ் பெர்ரி அரை சதம் அடித்தார். அவர் 52 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி தீப்தி ஷர்மா பந்துவீச்சில் தாஹ்லியா மெக்ராத் வசம் பிடிபட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவரில் 138 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கோமல் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வாரியர்ஸ் பந்துவீச்சில் சோபி எக்லஸ்டோன் 4, தீப்தி ஷர்மா 3, ராஜேஸ்வரி 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உபி வாரியர்ஸ் களமிறங்கியது.