சென்னை: அதிமுக தலைவர்களை பாஜ மேலிடம் மிரட்டியதை தொடர்ந்து எடப்பாடி அணி அமைதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இடைத்தேர்தலில் நாங்கள் நிற்கிறோம். எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று எடப்பாடி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் பேசினார். ஆனால் திடீரென ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிக்க போவதாக தெரிவித்தார். இதனால், எடப்பாடிக்கு ஆதரவு அறிவிப்பு செய்வதை அண்ணாமலை திடீரென நிறுத்தினார். திடீரென அண்ணாமலையை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி அணி தலைவர்களை பார்க்காமல் தனது கட்சி அலுவலகத்தில் காக்க வைத்தார்.
ஓபிஎஸ் சந்தித்து விட்டு சென்ற பின்னர் எடப்பாடி அணியினரை சந்தித்து பேசினார். தொடர்ந்து 10 நாட்கள் எடப்பாடியை அண்ணாமலை டீலில் விட்டார். இதனால் எடப்பாடி அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தார். இதை தொடர்ந்து‘‘ஆதரவு கொடுத்தால் கொடுங்கள், கொடுக்கா விட்டால் போங்க” என்ற நிலைக்கு எடப்பாடி வந்தார். அதற்கு அப்புறம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைத்தது. தொடர்ந்து எடப்பாடி அணிக்கு அண்ணாமலை ஆதரவு கொடுத்தார். இரட்டை இலை சின்னம் கிடைக்காததை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கூறி, தனது வேட்பாளரை வாபஸ் வாங்கினார் ஓ.பன்னீர்செல்வம். இருந்தபோதிலும் பாஜ, அதிமுக மோதல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
அண்ணாமலையை பிரசாரத்தில் அதிமுகவினர் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதே நேரத்தில் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதல் தொடர்ந்தாலும், பாஜ தலைவர்களை அதிமுகவில் இழுக்கும் படலத்தை எடப்பாடி தொடங்கினார். அதற்காக எடப்பாடி ஒரு குழுவை ஏற்படுத்தினார். அவர்கள் பாஜ நிர்வாகிகளை இழுக்க தொடங்கினர். அதே நேரத்தில், திடீரென இது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சிலர் பேசுவதாக இருந்தது. கே.பி.முனுசாமி, நந்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பாஜ தொடர்பாக கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் டெல்லி மேலிடத்தில் இருந்து அதிமுக மூத்த தலைவர்கள் குறிப்பாக, மேற்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மூத்த அமைச்சர்கள் 2 பேரும் அதிமுக ஆட்சியில் பவர் புல்லான துறையை கையில் வைத்து இருந்தனர். நிறைய சம்பாதித்தனர். பல ஆயிரம் கோடி சம்பாதித்து பல துறைகளில் பினாமி பெயரில் முதலீடு செய்துள்ளனர். மேலும் வெளிநாடுகளிலும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான எல்லா தகவல்களும் ஒன்றிய அமலாக்க துறையினர் எடுத்து வைத்துள்ளனர். அதை வைத்து பாஜ மேலிடம் மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல் காரணமாக தான் கடந்த 2 ஆண்டுகளாக இந்த 2 முன்னாள் அமைச்சர்களும் அமைதியாக இருந்து வருகிறார்கள். எந்த பெரிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. பெயர் அளவுக்கு மட்டும் தான் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர். பாஜ தலைவர்கள் தொடர்பாக வாயை திறக்கவில்லை. எல்லா தலைவர்களும் பாஜவுக்கு எதிராக பேசிய போதிலும் இந்த 2 முன்னாள் அமைச்சர்களும் அமைதி காத்தனர். பேட்டி கொடுக்கவில்லை. பத்திரிகையாளர்களை கண்டால் ஓட ஆரம்பித்தனர். இந்த மாதிரி சூழ்நிலையில் டெல்லி பாஜ தலைவர்கள் சிலர் போன் பண்ணி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த முன்னாள் அமைச்சர்கள் கடும் பயத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த மிரட்டலால் அந்த 2 பேரும் ஒன்று அதிமுகவில் இருந்து பாஜ கூட்டணியை தொடர்வது, இல்லாவிட்டால் பேசாமல் வெளியே போய் விடலாம். பாஜவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
எடப்பாடியிடம் இதுதொடர்பாக பேசி பார்க்கலாம் என்று பேசி பார்த்தனர். தேவையில்லாமல் பாஜவிடம் மோத வேண்டாம். நம்மிடம் ஆட்சி அதிகாரம் கிடையாது. எல்லாரும் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைதான் ஏற்படும். ஒன்று பாஜ தாக்குதலை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நாங்க வெளியே போய் விடுவோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து எடப்பாடி நேற்று முன்தினம் பாஜ தலைவர்களுக்கு எதிராக யாரும் பேச வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். பாஜவினரை இழுக்கும் படலத்தையும் நிறுத்தி வைத்துள்ளார். உட்கட்சிக்குள்ளேயே கலகம் வரும் என்று எடப்பாடி எதிர்பார்க்கவில்லை.
இந்த 2 முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்தார்கள் என்றால் அதிமுகவை உடைத்து விடுவார்கள். இந்த உடைப்பு ஓபிஎஸ்சை விட வேகமாக இருக்கும் என்று எடப்பாடி கருதினார். இதனால், தான் எடப்பாடி பின்வாங்கியதாக கூறப்படுகிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் திடீர் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கண்டபடி அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார். ஜெயலலிதாவை விட என் மனைவி ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்தவர். ஜெயலலிதாவுக்கு பர்கூரில் டெபாசிட் போச்சு என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால் அதிமுக மூத்த தலைவர்கள் அமைதியாக இருப்பதால், தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தேவையில்லாமல் பாஜவிடம் மோத வேண்டாம். நம்மிடம் ஆட்சி அதிகாரம் கிடையாது. எல்லாரும் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைதான் ஏற்படும்.