ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியது தவறு ஆளுநர்கள் வைஸ்ராய்கள் அல்ல: ப.சிதம்பரம் பாய்ச்சல்

சிவகங்கை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு. அவசர சட்டம் இயற்றிய போது ஏற்றுக் கொண்ட ஆளுநர், அதே அவசர சட்டம், சட்ட வடிவமாக வரும் போது எப்படி குறை சொல்லி திருப்பி அனுப்புகிறார்? முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றலாம் என அறிக்கை தந்த பிறகுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றிய சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்புவது தவறு.

மீண்டும் சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அரசியல் சாசனப்படி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு இருக்கிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் என்பது குற்றவியல் சட்டம். குற்றவியல் சட்டத்தை நிறைவேற்றுவது என்பது முழுக்க, முழுக்க மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பேசும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர். மற்ற மொழி பேசும் மக்களை சகோதரர்களாக நினைக்கும் தமிழகத்தில் இப்போது மட்டும் இந்தி பேசும் மக்கள் மீது எப்படி துவேஷம் வரும்? அப்படி எந்த துவேஷமும், அச்சுறுத்தலும் தமிழகத்தில் எந்த மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கிடையாது.

இதுபோன்ற துவேஷங்களை பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பு தூண்டி விடுகிறது. பாஜ வளரவில்லை. வீக்கமெல்லாம் வளர்ச்சியில்லை. தவறான பிரசாரங்கள் மூலம் வளர முடியுமா என பார்க்கிறது. தமிழ் மண்ணில் அது நடக்காது. பாஜ ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அடக்கி வாசிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களை வைஸ்ராயாக நினைத்து செயல்படுகின்றனர். அவர்கள் வைஸ்ராய்கள் அல்ல. அரசியல் சாசனத்தில் என்ன வரையறுக்கப்பட்டுள்ளதோ அதை ஆளுநர்கள் மீறுகின்றனர். இதற்கெல்லாம் ஒரு தீர்வு வரும். அண்ணாமலை பணிந்து போவது தனக்கு பழக்கமில்லை என்கிறார். பணிவு இல்லாதவர் எப்படி அரசியல் தலைவராக இருக்க முடியும். பணிவு இல்லாத துணிவு தவறான பாதையில்தான் அழைத்துச் செல்லும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: