×

‘வெளியேறு... வெளியேறு... கட்சியை விட்டு வெளியேறு...’ எடப்பாடியை கண்டித்து சேலத்திலும் போஸ்டர்கள்: சிவகங்கை, வத்தலக்குண்டு, நிலக்கோட்டையிலும் எதிர்ப்பு

திருப்புவனம்: கட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி எடப்பாடியை கண்டித்து சொந்த மாவட்டமான சேலம்,சிவகங்கை, வத்தலக்குண்டு, நிலக்கோட்டையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக யாருக்கு என்ற அதிகார சண்டை ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடந்து வருகிறது. இந்த சூழலில் கடந்தாண்டு எடப்பாடி கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்வு செய்யும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட எடப்பாடி அணியை சேர்ந்த வேட்பாளர் தென்னரசு படுதோல்வியை சந்தித்தார். எடப்பாடி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்ததால், அவரை கட்சியை விட்டு வெளியேற கோரி கடந்த சில தினங்களாக திருச்சி, மதுரை, நெல்லை, உளூந்தூர்பேட்டை போன்ற பகுதிகளில் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவரை கண்டித்து நகர் முழுவதும் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் சேலம் மாவட்ட செயலாளர் தினேஷ் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில், ‘அதிமுகவின் தொடர் தோல்வியை பெற்றுத்தந்த எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம். தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை, புரட்சி தலைவி அம்மா வளர்த்த இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பழனிசாமியே வெளியேறு, அம்மாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்த பழனிசாமியே வெளியேறு, தொண்டர்களை மதிக்காத பழனிசாமியே வெளியேறு, கட்சியை அழித்துக்கொண்டிருக்கும் பழனிசாமியே கழகத்தை விட்டு வெளியேறு’ என கூறப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த போஸ்டர்களை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். இதுதொடர்பாக சேலம் போலீஸ் கமிஷனரிடம் எடப்பாடி அணி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் புகார் அளித்தார். திருப்புவனம்: ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை வருகிறார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் அணியினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

திருப்புவனம் கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ‘வீரத்திற்கு பெயர் போன சிவகங்கை மண்ணுக்குள் துரோகத்திற்கு பெயர் போன எடப்பாடியே உள்ளே வராதே’, ‘கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்.... அதிமுகவை 8 முறை தோல்வியடைய செய்த எடப்பாடியை கண்டிக்கிறோம்..’,  ‘வெளியேறு.. வெளியேறு... கட்சியை விட்டு வெளியேறு.. சமத்துவ பேரியக்கத்தை சமுதாய இயக்கமாக மாற்றிய எடப்பாடியே வெளியேறு..’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள்  ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல், திண்டுக்கல் தெற்கு மாவட்டம், நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் என்ற பெயரில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடியை கண்டித்து ஓபிஎஸ் அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

Tags : Edappadi ,Salem ,Sivagangai ,Vathalakundu ,Nilakottai , 'Quit... Quit... Quit Party...' Posters Condemning Edappadi in Salem: Protests in Sivagangai, Vathalakundu, Nilakottai
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி மாஜி...