×
Saravana Stores

கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டம், வேறு பகுதிக்கு சென்றதால், அப்பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள பேரிஜம் ஏரிப் பகுதியைச் சுற்றிப் பார்க்க சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருவர். இந்த பகுதிக்கு செல்ல வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதே போல மோயர் பாயின்ட், தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு ஆகியவை முக்கிய சுற்றுலா இடங்களாக உள்ளன.

இந்நிலையில், நேற்று அதிகாலை பேரிஜம் ஏரிப்பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பேரிஜம் ஏரிப் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், யானைக் கூட்டம் இன்று வேறு பகுதிக்கு சென்றதால், பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘யானைக் கூட்டம் குட்டிகளுடன் பேரிஜம் வனப்பகுதிக்குள் நுழைந்தது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக, அப்பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்போது பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், அப்பகுதியை விட்டு சென்றுவிட்டன. இதனால் பேரிஜம் பகுதியை சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு வனத்துறை இன்று முதல் அனுமதி அளித்துள்ளது’ என்றார். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Barijam Lake ,Kodaikanal , Barijam Lake allowed in Kodaikanal: Tourists rejoice
× RELATED கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு