×

மழை, நீர்வரத்து இல்லாததால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் சரிவு: குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

பெரியகுளம்: மழை மற்றும் நீர்வரத்து இல்லாததால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 126.28 அடியாகும். இந்த அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும். சோத்துப்பாறை அணை பகுதியில் மழை இல்லாததாலும், பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 31.16 அடியாக உள்ளது.

தூர் வாரப்படாததால் அணையில் 20 அடி வரை மண் மேவியுள்ளதால் 11 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. தற்போது அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 7 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கலங்கலாக உள்ளது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில்,  அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சோத்துப்பாறை அணையை நம்பியுள்ள பெரியகுளம் நகராட்சி, தாமரைக்குளம், தென்கரை, வடுகபட்டி உள்ளிட்ட பேரூராட்சிகள் மற்றும் 25 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, குடிநீரை சிக்கனமாகவும், காய்ச்சி குடிக்கவும் வேண்டும் என பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Tags : Sodibaparam Dam , Due to lack of rain and water supply, Sothupparai dam water level decline: risk of water scarcity
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள...