×

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் டெல்லியில் தொடங்கியது, எஸ்சிஓ தலைமை நீதிபதிகள் மாநாட்டை பாக். புறக்கணிப்பு: சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கிய நிலையில், பாகிஸ்தானின் தலைமை நீதிபதி பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான்,  கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள்  உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய  நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22வது  உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் கடந்த சில மாதங்களுக்கு  முன் நடந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்தாண்டுக்கான  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா  ஏற்றுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வரும் மே  மாதம் கோவாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள்  மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் நாட்டின்  வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்நாட்டு  வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ மாநாட்டில் பங்கேற்பாரா? என்பது இன்னும்  முடிவாகவில்லை. இந்த நிலையில் இன்று முதல் நாளை மறுநாள் வரை (மார்ச் 12) டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தலைமை நீதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த மாநாட்டில் தலைமை நீதிபதி பங்கேற்க மாட்டார் என்று அந்நாட்டின் அரசு அறிவித்துள்ளது. மற்ற நாடுகளின் தலைமை நீதிபதிகள் அல்லது பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தவிர்க்க முடியாத காரணத்தால் டெல்லியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை  நீதிபதிகள் மாநாட்டில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதி  பங்கேற்க முடியாது. கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவிடம் வருத்தம் தெரித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு மற்றும்  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா -  பாகிஸ்தான் இடையிலான உறவுகள் கடுமையாக பாதித்துள்ள நிலையில், சர்வதேச மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Shanghai Cooperation Summit ,Delhi ,SCO ,Chief Justices Conference ,Pakistan ,China , Shanghai Cooperation Summit begins in Delhi, SCO Chief Justices Conference in Pakistan Absence: Participation of representatives of countries including China
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...