×

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது: 8 கிலோ பறிமுதல்

புழல்: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு போலீசாரின் தீவிர வாகன சோதனையில், அங்கு சந்தேக நிலையில் நின்றிருந்த வடமாநில வாலிபரை சோதனை செய்தனர். இதில், அவர் வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். வடமாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலமாக செங்குன்றம் வழியே கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று மாலை செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் சந்தேக நிலையில் நின்றிருந்த ஒரு வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகமான போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜி கிஷோர் போய் (23) எனத் தெரியவந்தது. மேலும், இவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து, செங்குன்றத்தில் அவர் தங்கியுள்ள வாடகை வீட்டில் சிறுசிறு பொட்டலங்களாக மாற்றி, கோவை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சில்லறை விற்பனைக்காக எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags : North State ,Sengunram , North State youth arrested for smuggling ganja at Sengunram bus stand: 8 kg seized
× RELATED பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கி ரூ.5 ஆயிரம் வழிப்பறி