ஒடுகத்தூர் அடுத்த ஆண்டிகொட்டாய் கிராமத்தில் இளைஞர்கள் மத்தியில் சீறி பாய்ந்த 250 காளைகள்

*மாடுகள் முட்டி 16 பேர் காயம்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த ஆண்டிகொட்டாய் கிராமத்தில் நேற்று நடந்த மாடு விடும் விழாவில் 250 காளைகள் சீறி பாய்ந்து ஓடின. விழாவில், மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஆண்டிகொட்டாய் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 67ம் ஆண்டு மாடு விடும் விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 10 மணியளவில் அரசு அதிகாரிகள், விழாக்குழுவினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் விழா உறுதிமொழி எடுத்தனர்.

விழாவில், திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 250 காளைகள் பங்கேற்றன. தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்துவிடப்பட்டது. பந்தய தூரத்தின் ஆரம்ப புள்ளியில் இருந்து காளைகளை அவிழ்த்துவிட்டதும் இளைஞர்கள் மத்தியில் சீறி பாய்ந்து ஓடின. வீதியில் புழுதி பறக்க ஆக்ரோஷமாக ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்ததால் விழா களைகட்டியது.

மேலும், தன்னை தொட்டு பார்த்தவர்களை தெறிக்கதெறிக்க ஓடவிட்ட காளைகளால் விழாவில் ஆரவாரத்திற்கு குறைவே இல்லாமல் இருந்தது. கூட்டம், கூட்டமாக நின்றிருந்த இளைஞர்களை வயல்வெளி, கரும்பு தோட்டம், தெருக்கள் என நாலாபுறமும் காளைகள் சிதறடித்து ஓட விட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விழாவை காண திரண்டிருந்தனர்.

குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசு ₹70 ஆயிரம், 2ம் பரிசு ₹60 ஆயிரம், 3ம் பரிசு ₹45 ஆயிரம், 4ம் பரிசு ₹30 ஆயிரம், 5ம் பரிசு ₹20 ஆயிரம் என மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும், வீதியில் நின்றிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு முகாமிட்டிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

2 பேர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: