* அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி
* மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஆய்வு
செய்யாறு : செய்யாறில் தனியார் கல்லூரியில் உணவு சாப்பிட்ட கல்லூரி விடுதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 பேர் வாந்தி மயக்கத்துடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை இயக்குனர் சதீஷ்குமார் நேரில் ெசன்று விசாரித்து ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் காஞ்சிபுரம் சாலையில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரில் 900 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் ஒரு மாணவி உள்பட 14 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதியில் இட்லி, சட்னி, சாம்பார் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் நேற்று காலை மாணவர்கள் எழுந்தபோது சிலருக்கு வாந்தியும், பேதியும் ஏற்பட்டுள்ளது. பயந்து போன மாணவர்கள் உடனே கல்லூரி வார்டன் சிவராஜிடம் கூறியுள்ளனர். மேலும் மயக்கம் வருவதாகவும் தெரிவித்தனர். உடனே வாந்தி மயக்கத்தில் பாதிக்கப்பட்ட ஆர்த்தி (17), ஜெயப்பிரகாஷ் (19), பார்த்திபன் (20), அஸ்வத் (19), சுரேஷ் (19), சதீஷ் (20), வெங்கடகிருஷ்ணா (18) சஞ்சய் (31) ஆசிரியர்கள் செல்வம்(37), ராமதாஸ் (35), ஆகிய 10 பேரையும் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை கண்காணிப்பாளர் பாண்டியன் தலைமையில் மருத்துவ குழுவினர் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்த தகவல் அறிந்த செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குனர் சதீஷ்குமார், நெடும்பிறை ஆரம்ப சுகாதார நிலையை மருத்துவர் சரண்யா, உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ, வட்டார மேற்பார்வையாளர் சீனிவாசன் மற்றும் சுகாதாரத் துறையினர் கல்லூரி விடுதிக்குச் சென்று கல்லூரி முதல்வர் எழிலரசி மற்றும் விடுதி வார்டன் சிவராஜிடம் என்ன உணவு கொடுக்கப்பட்டது என்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நேற்றுமுன்தினம் மதியம் கல்லூரியில் பிரியாணி மற்றும் இரவு சட்னி, சாம்பாரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாப்பிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தண்ணீர் டேங்க்குகள், சமையல் செய்யும் கூடம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து உணவை தரமாக மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தினர்.
தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் சாப்பிட்ட உணவு புட்பாயிசன் ஆகி உள்ளதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரைவில் டிஸ்ஜார்ச் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
