அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புற்றுநோய்க்கான பரிசோதனை

சென்னை: அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், சென்னையிலுள்ள பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்காக ‘ஸ்க்ரீன் டூ வின்’ பரிசோதனை தொடங்கியுள்ளது. சர்வதேச மகளிர் தின அனுசரிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்நிகழ்வு புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் சோதனையை செய்துகொள்ள பெண்களை ஊக்குவிப்பது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது மற்றும் ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது ஆகியவற்றை மையமாக கொண்டிருக்கிறது. தெலங்கானா மாநில ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வேல்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் ப்ரீத்தா கணேஷ் ஆகியோரால் அப்போலோ மொபைல் புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டம், தொடங்கி வைக்கப்பட்டது.

தொடக்க விழாவுக்கு, சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் கதிரியக்க புற்றுநோயியல் பிரிவின் முதுநிலை நிபுணர் சப்னா நாங்கியா, புற்றுநோய் சார்ந்த மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ் மற்றும் மார்பகம் மற்றும் இடையீட்டு கதிரியக்கவியல் நிபுணர் முக்தா மகாஜன் முன்னிலை வகித்தனர். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களது சங்கமான ‘இணையும் கைகள்’ என்ற அமைப்பின் ஒத்துழைப்போடு இந்த புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டம் மேற்கொள்ளப்படும். அப்போலோ மொபைல் சுகாதார பேருந்து வழியாக நடத்தப்படும் இதில் டிஜிட்டல் மேமோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்டு, பேப் ஸ்மியர் சோதனை, இசிஜி, எக்கோ, அடிப்படை ரத்தப் பரிசோதனைகள், பிஎம்ஐ, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

இதில் பங்கேற்று பலனடைய விரும்பும் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் சவுகரியத்திற்கு ஏற்றவாறு ஸ்க்ரீனிங் சோதனையை பேருந்து அமைவிடத்திற்கு வந்து செய்து கொள்ளலாம். மருத்துவ நிபுணருடனான கலந்தாலோசனையையும் பெறமுடியும். இதுகுறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘‘ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிசெய்ய அப்போலோ புரோட்டான் ஸ்க்ரீனிங் முகாம்களில் பங்கேற்று பலனடையுமாறு பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் சமூகத்தினரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

வேல்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் ப்ரீத்தா கணேஷ் கூறுகையில், ‘‘சிகிச்சையின் விளைவுகளை கணிசமாக மேம்படுத்துவதற்கு ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிவதற்கு ஸ்க்ரீனிங் சோதனை இன்றியமையாதவை. அனைத்துப் பெண்களும் மார்பக புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் சோதனையை செய்து கொள்ளுமாறும் மற்றும் இதுபற்றி நன்கு அறிந்தவர்களாகவும் இருப்பதோடு, பிற பெண்களுக்கும் இதுபற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: