×

பாக், சீனாவுடன் இந்தியாவுக்கு போர் ஏற்படும்: அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: பாகிஸ்தான்- இந்தியா மற்றும் இந்தியா-  சீனா இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல் ஆய்வறிக்கை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதில், கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை பிரச்னை அதிகரித்தது. இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தியதில் எல்லை விவகாரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்ட சூழலும் காணப்படுகிறது.

இது கடந்த காலங்களில் இல்லாத வகையில் தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.  அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் படைகளை குவித்து வருவதனால், ஆயுத மோதலை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்து உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் அதன் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட கூடிய சாத்தியமும் உள்ளது. அமெரிக்காவை தலையிட அழைக்கக்கூடிய நிலையும் காணப்படுகிறது.   இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட  நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின்  ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தில் போல் இல்லாமல், பிரதமர்  மோடி தலைமையிலான இந்தியா, ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம்  அதிகமாக உள்ளது.

காஷ்மீரில் வன்முறை, அமைதியின்மை அல்லது இந்தியாவின் மீது  நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றால் பதற்றம் அதிகரித்து இரு  நாடுகள் இடையே போர் உருவாகும் ஆபத்து உள்ளது. இந்தியா- பாக். எல்லைகளில் வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கலாம். அணு ஆயுத நாடுகளுக்கு இடையே போர் அதிகரிக்கும் சூழல் இருப்பதால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நெருக்கடிகள் அதிகமாகும். ஒவ்வொரு நாட்டிலும்  ஏற்படும் பிரச்னையை பொறுத்து பதற்றம் அதிகரிக்கலாம். தீவிரவாத தாக்குதல் , காஷ்மீரில் மோதல் ஆகிய சம்பவங்களால் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,Pak ,China ,US , India may go to war with Pak, China: US intelligence agency warns
× RELATED ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO)...