வெள்ளியங்காடு-பில்லூர் சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அருகே செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்: வீடியோ வைரல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காட்டில் இருந்து பில்லூர் அணைக்கு செல்லும் மலைப்பாதையில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடப்பதும், சாலையில் நிற்பதும், வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவுக்காகவும், தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள்  சாலையை கடந்து மறுபுறம் செல்கின்றன.

அதிலும் குறிப்பாக தந்தங்களுடன் கூடிய ஒற்றைக் காட்டு யானை கடந்த சில நாட்களாக வெள்ளியங்காடு-பில்லூர் சாலையில்  உலா வந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இச்சாலையில் கார் ஒன்று  சென்று கொண்டிருந்தது. அப்போது,சாலையின் குறுக்கே அந்த ஒற்றை  காட்டு யானை  நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து  தங்களது வாகனங்களை அங்கே நிறுத்தி விட்டு காத்திருந்தனர். சற்று  நேரத்திற்கு பின்னர் காட்டு யானை அமைதியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் காட்டு யானையின் அருகே  நின்று செல்பி எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை அறிந்த வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காரமடை வனச்சரகர் திவ்யா கூறுகையில்,  கடந்த சில தினங்களாக இரு தந்தங்களுடன் கூடிய ஒற்றைக்காட்டு யானை வெள்ளியங்காடு-பில்லூர் செல்லும் சாலையில் உலா வந்து கொண்டுள்ளது. இச்சாலையின் வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்குமாறும், கவனத்துடனும், பாதுகாப்புடன் அதே நேரத்தில் எச்சரிக்கையுடனும் பயணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், காட்டு  யானையின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதோ, விரட்ட முயற்சிப்பதோ கூடாது  எனவும், மீறினால் வனவிலங்கு பாதுகாப்புச்சட்டத்தின் படி உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: