×

பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா: 2 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழாவில் நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படும். நடப்பாண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது.

கடந்த 5ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. குண்டம் இறங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே கோயில் வளாகத்தில் மக்கள் வந்து இடம் பிடித்திருந்தனர். நேற்று அதிகாலை கோயில் பூசாரிகள் முதலில் குண்டம் இறங்கினார்.

அதைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். பெண்கள் தங்களது குழந்தைகளை சுமந்தபடியும் குண்டம் இறங்கினர். இவ்விழாவையொட்டி ஈரோடு மாநகர் மட்டும் அல்லது சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இன்று (9ம் தேதி) மாலை 5 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags : Bhadrakaliamman Temple Gundam Festival , Bhadrakaliamman Temple Gundam Festival: 2 thousand devotees tread fire and worship
× RELATED கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா