×

குழந்தை திருமணம் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும்: நீதிபதி பி.வி.சாண்டில்யன் பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சர்வதேச உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், சில்ட்ரன்ஸ் பிலீவ் உதவியுடன் வளரினம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான கருத்தரங்கம்  நடைபெற்றது.
இதற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.மகாலட்சுமி மோதிலால் தலைமை வகித்தார். ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் பி.ஸ்டீபன் வரவேற்று பேசினார். ஒன்றியக்குழு தலைவர் பி.வெங்கட்ரமணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெ.மாணிக்கம், க.பொற்செல்வி, ஊராட்சி தலைவர் சித்ரா ரமேஷ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் இந்திரா, புவனேஸ்வரி, பிருந்தாவனம் குழந்தைகள் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு தலைவி உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது; பெண் குழந்தைகளுக்கு கல்விதான் முக்கியம் என்பதை உணர்ந்து உயர்கல்வி வரையில் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தீய தொடுதல், நல்ல தொடுதல் குறித்து எடுத்துரைக்கவும். சட்டம்குறித்த விழிப்புணர்வும் அவசியம். பணியிடங்களில் பாலின பேதமும் பாலியல் சீண்டலும் இன்னமும் தொடர்வது வேதனையானது. தற்போதைய நிலையில் அனைத்து இடங்களிலுமே ஆண்களுக்கான வாய்ப்பு, பெண்களை ஒப்பிடும்போது சற்று அதிகமாகவே உள்ளது. ஆனாலும் அவர்கள் செய்யும் பணிக்கு போதிய அங்கீகாரமோ ஆதரவோ கிடைப்பதில்லை.

எனவே பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்கும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், பாலின சமத்துவத்தை நோக்கி மகளிர் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிசெய்ய நல்ல பணிச்சூழலையும் குழந்தை திருமணம் இல்லாத சமுதாயமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி பேசினார். இதனிடையே கிராமங்களில் குழந்தைகள் திருமணங்கள் தடுத்தல், கொத்தடிமை தொழில், பாலியல் தொல்லை குறித்து ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்யும் வகையில் மகளிர் தன்னார்வலர்கள் 10 பேருக்கு கையடக்க கணினிகளையும் அவர் வழங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞர் சொப்னா, ஐ.ஆர்.சி.டி.எஸ். திட்ட மேலாளர் விஜயன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். மகளிர் இளைஞர் குழு பிரதிநிதி சினேகா நன்றி கூறினார்.

Tags : Justice ,Chandilyan , A child marriage free society should be created: Justice PV Chandilyan speech
× RELATED அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்...