பெண்களுக்கான பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்கிறார்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேச்சு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், சென்னீர்குப்பம் ஊராட்சியில் செயல்பட்டுவரும் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டி அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ‘’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம்  மதிப்பீட்டில் இரண்டு  புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்த்தனன், ஆர்.பிரபாகரன், வி.பி.பிரகாஷ், சண்முகம், சுரேஷ், வார்டு உறுப்பினர் வி.பி.சுகன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ராமகுமார் வரவேற்று பேசினார். ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை துவக்கிவைத்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகள் ஊட்டி விட்டும், ஆசிரியைகளுக்கு சால்வை அணிவித்தும் கவுரவித்தார்.

இதில் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசியதாவது; திமுக ஆட்சியில் புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு  விலையில்லா பேருந்து பயணம் என்று பெண்களுக்கான பல நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பாஜகவினர் தொடர்ச்சியாக தமிழகத்தில் நாடகம் நடத்தி வருகின்றனர். ஒரு கட்சியின் சின்னத்தை இந்திய தலைமை ஆணையமே தர வேண்டும்.

ஆனால் ஈரோடு  இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியே சின்னத்தை யாருக்கு தரலாம் என்று முடிவு செய்தது பாஜகவின் மிகப்பெரிய  நாடகம். அதிமுகவின் பிரிவினையை பயன்படுத்தி மியூசிக்கல் சேர் விளையாட்டு போல யார் பக்கம் பலம் இருக்கிறதோ அங்கு பாஜக அமர பார்க்கிறது.  இவ்வாறு கூறினார்.

Related Stories: