கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ. மாஜி கார் டிரைவர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி திடீர் சோதனை: இடைப்பாடி அருகே பரபரப்பு

சேலம்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜின்  உறவினர் வீட்டில், சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில், அவரது கார் டிரைவராக இருந்த சேலம் மாவட்டம் இடைப்பாடி, சமுத்திரத்தை சேர்ந்த கனகராஜ் தலைமையில், கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவனான சயான் உள்ளிட்டோர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் பிடியில் சிக்குவதற்குள், மர்மமான முறையில் கனகராஜ் ஆத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கில் பல்வேறு மர்மமுடிச்சுக்கள் புதைந்து கிடப்பதால், சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதால், செல்போன் பேச்சு போன்ற விவரங்களை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழித்திருப்பது தெரியவந்துள்ளது. அதனை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் திருச்சியில் முகாமிட்டிருந்த சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் டவர் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று, சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் பெரியம்மா வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். கனகராஜின் பெரியம்மா பாவாயியின் வீடு பணிக்கனூரில் உள்ளது. டிஎஸ்பி சந்திரசேகர் தலைமை யிலான போலீசார், நேற்று காலை 7 மணிக்கு அங்கு சென்று சோதனை நடத்தினர். பாவாயி, அவரது கணவர் ராமசாமி, மகன் கோவிந்தராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

கனகராஜ் விபத்தில் சிக்குவதற்கு முன்பு இங்கு வந்துள்ளார். அது தொடர்பாக விசாரணை நடத்தியதாக தெரிகிறது. கனகராஜின் அண்ணன் தனபால், அமமுகவில் இருந்தார். கனகராஜ் இறந்தவுடன் தனது தம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்களின் பெயரையும் அதிமுக ஆட்சியின் போதே தொடர்ந்து கூறி வந்தார். ஆனால், கொடநாடு வழக்கின் சாட்சிகளை அழித்ததாக தனபாலையும், சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில், கனகராஜ் சென்னையை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Stories: