×

ராயபுரம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் ரூ.430 கோடியில் 372 கழிப்பறைகள் கட்ட திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.430 கோடியில் 372 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்ட அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் ராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் தேனாம்பேட்டை (மெரினா) ஆகிய மண்டலங்களில் 372 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்டவும், ஏற்கனவே உள்ள கழிப்பறைகள், சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை புதுப்பிக்கவும், ஒரு ஆண்டிற்கு கட்டுமானப் பணி மற்றும் 8 ஆண்டுகளுக்கு அதன் பராமரிப்பை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அப்போது, அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு, முன்னோடி திட்டமாக, சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் ஆர்.எஸ்.பி. ஆர்ச் பிராஜக்ட் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட், மெட்டெக் டிசைன் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியர்ஸ், பெர்ஹ்ரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பின் மூலம் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ராயபுரம் மண்டலத்தில் புதிதாக 51 பொதுக்கழிப்பறைகளும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அதிக அளவு சிதிலமடைந்த 71 கழிப்பறைகளில் மறுசீரமைப்பு பணிகளும், குறைந்த அளவு சிதிலமடைந்த 105 கழிப்பறைகளில்  மறுசீரமைப்பு பணிகளும் என மொத்தம் 227 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த கழிப்பறைகள் 2159 இருக்கை வசதிகள் கொண்டதாகும். திரு.வி.க.நகர் மண்டலத்தில் புதிதாக 36 பொதுக்கழிப்பறைகளும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அதிக அளவு சிதிலமடைந்த 17 கழிப்பறைகளில் மறுசீரமைப்பு பணிகளும், குறைந்த அளவு சிதிலமடைந்த 81 கழிப்பறைகளில் மறுசீரமைப்பு பணிகளும் என மொத்தம் 134 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த கழிப்பறைகள் 988 இருக்கை வசதிகள் கொண்டதாகும்.

தேனாம்பேட்டை மண்டலம் மெரினா கடற்கரையில் புதிதாக 3 பொதுக்கழிப்பறைகளும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குறைந்த அளவு சிதிலமடைந்த 8 கழிப்பறைகளில்  மறுசீரமைப்பு பணிகளும் என மொத்தம் 11 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த கழிப்பறைகள் 123 இருக்கை வசதிகள் கொண்டதாகும். இது, சென்னை மாநகராட்சியின் மற்ற மண்டலங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் விஷூ மஹாஜன், ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர்கள் கோ.சாந்தகுமாரி, சர்பஜெயாதாஸ் நரேந்திரன், வட்டார துணை ஆணையர்கள் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.சிவகுரு பிரபாகரன், எம்.பி.அமித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* முக்கிய பகுதிகளில் சாத்தியக்கூறு ஆய்வு
மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ள முக்கிய பகுதிகளான அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள தற்போது சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

* 954 கட்டணமில்லா பொது கழிப்பிடங்கள்
சென்னை மாநகராட்சியின் சார்பில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்த கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.


Tags : Rayapuram ,Nagar ,Thenampet ,Minister ,KN Nehru , Rayapuram, Mr. V.K. Project to build 372 toilets in Nagar and Thenampet zones at a cost of Rs 430 crore: Agreement with private companies in the presence of Minister KN Nehru
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...