×

பிளாஸ்டிக் பேக்கிங் செய்ய இ.பி.ஆர் சான்று கட்டாயம்: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: பிளாஸ்டிக் பேக்கிங் செய்ய இ.பி.ஆர் எனப்படும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புக்கான சான்றிதழை, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கட்டாயம் பெற வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின், திருத்தப்பட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கவும், தரம் பிரித்து மறுசுழற்சி மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளில் இணை எரிபொருளாக உபயோகிக்கவும் அல்லது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் மேலாண்மையில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி பொருளாதாரத்தை அடைய முடியும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்  பொருட்களின் தடையும், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களுக்கான உற்பத்தியாளர் பொறுப்புக்கான வழிகாட்டுதல் விதிகளும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான முக்கியமானபடிகள்.

இந்த விதிகளின்படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபார தர அடையாள  உரிமையாளர்கள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்பவர்கள் தங்களை பதிவு செய்து இ.பி.ஆர்  பொறுப்புகளை திறம்பட, வெளிப்படைத்தன்மையுடன் நிறைவேற்றும் பொருட்டு ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு பிரத்யேகமான இணைய தளத்தை (https://eprplastic.cpcb.gov.in/) உருவாக்கியுள்ளது.
இதன்படி, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால், அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பேக்கிங் செய்ய நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புக்கான (இ.பி.ஆர்) சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இ.பி.ஆர் பதிவை திறம்பட செயல்படுத்துவதற்காக அத்தகைய செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிளாஸ்டிக் ‘‘இ.பி.ஆர் மையம்’’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  இ.பி.ஆர் மையமானது அனைத்து வார நாட்களிலும் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 9500076438 என்ற பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் செயல்படும். பிளாஸ்டிக் பேக்கேஜிங்  பொருட்களுக்கான இ.பி.ஆர் சான்றிதழ் பெற வேண்டிய அனைத்து பதிவாளர்களும், இ.பி.ஆர் இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பான உதவி, வழிமுறைகள், மற்றும் தகவல்களைப் பெற மேற்கூறியுள்ள தொடர்பு எண்ணிலும் pwmsec@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Control , EPR certificate mandatory for plastic packaging: Pollution Control Board instructions
× RELATED பதஞ்சலி நிறுவனத்தின் பொய் விளம்பர...