சென்னை: பாஜவினரை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தனி குழு அமைத்துள்ளார். இந்த குழுவினரின் நடவடிக்கையால், நேற்றும் 2 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது இரு கட்சியினரிடையே மோதலை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இந்தநிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளது. அதில், டிடிவி தினகரன் மட்டும் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலாவோ அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறி வருகின்றனர். அதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பொதுவானவர்களாக பாஜ காட்டிக் கொண்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், தமிழகம் வரும் போதெல்லாம் இருவரையும் தனித்தனியாகவே சந்தித்து வந்தனர். அதேபோல, இருவரும் டெல்லி சென்றால் 2 தலைவர்களையு சந்திக்கலாம், தற்போது, அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி அணியில்தான் பலம் வாய்ந்த நிர்வாகிகள் அதிகமாக உள்ளனர். எனினும், இரு அணிகளுக்கும் ஆதரவு தராமல் அண்ணாமலை இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் பாஜவின் ஆதரவு தேவையில்லை தேர்தல் பணிைய பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடித்தார். மேலும். தனியாக சென்று பிரசாரம் செய்யுங்கள் என்று கூறினார்.இதனால் அண்ணாமலை அதிருப்தி அடைந்தார்.
தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதை பயன்படுத்தி கொண்ட அண்ணாமலை, அதிமுக தோல்விக்கு அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்று கூறினார். இதற்கு அதிமுக நிர்வாகிகள், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி ஆகியோர் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் அண்ணாமலைக்கு, நெருக்கமான ஐடி விங் நிர்வாகி சி.டி.நிர்மல்குமார், மாநில நிர்வாகியுமான திலிப் கண்ணன் அதிமுகவில் இணைந்தார். இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, எதற்கும் எதிர்வினை உண்டு என்று பதிலடி கொடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, பாஜ நிர்வாகிகளை இழுக்க அதிமுகவில் ஒரு குழுவை நியமித்துள்ளார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர் அம்மு (எ) ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் டி.விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.இந்தநிலையில், பாஜ உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் லதா, ஒன்றிய தலைவர் வைதேகி நேற்று அதிமுகவில் இணைந்தனர். அதேபோன்று சென்னை மேற்கு மாவட்ட பாஜ ஐடி பிரிவு நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகினர். பாஜவை உடைத்து ஷாக் கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு செயல்பட்டு வருவது, அண்ணாமலைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான், எடப்பாடிக்கு எதிராக செயல்படுவது குறித்து அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக
சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 75 கிலோ கேக் வெட்டி பெண்களுக்கு ஊட்டினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், காமராஜ், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜவுடன் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.