×

சென்னையில் ரூ.369.04 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்கள் அமைக்கும் பணியினை அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்!

சென்னை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.369.04 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்கள் அமைக்கும் பணியினை நகராட்சி  நிருவாகத் துறை அமைச்சர் கே. என். நேரு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-133 மற்றும் வார்டு 141க்குட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை மற்றும்  சி. ஐ. டி. நகர் பிரதான சாலையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியினையும், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையின்மேல் ரூ.142 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியினையும், வார்டு-41க்குட்பட்ட மணலி சாலையில் ரூ.96.04 கோடி மதிப்பீட்டில் எல்.சி.2பி இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியினையும் நகராட்சி  நிருவாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (08.03.2023) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர்  ஆர். பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, அமைச்சர் பெருமக்கள் இராயபுரம் மண்டலம், வார்டு-62க்குட்பட்ட சிந்தாதிரிபேட்டை, அருணாசலம் சாலையில் ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:
    
இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள அனைத்து மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள். வருடத்தில் ஒருநாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வருடம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கென பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  
    
அதற்கு மிகச்சிறந்த உதாரணம். அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி, பெண்கள் கல்வி பயிலும் வகையில் புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.
    
பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தேன். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் இன்று தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையின்மேல் ரூ.142 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இந்தப் பணியானது 18  மாதங்களில் முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்பட உள்ள மேம்பாலங்களின் விவரம்;

* கோடம்பாக்கம் மண்டலம், வார்டு - 133 மற்றும் வார்டு 141 ல், தெற்கு உஸ்மான் சாலை மற்றும்  சி. ஐ. டி நகர் பிரதான சாலையில் ரூபாய் 131 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 1200 மீ, மொத்த அகலம் -  8.40 மீ, பணியின் காலம்  - 24 மாதங்கள், மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 2 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள், தினசரி 40 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

* தண்டையார்பேட்டை  மற்றும் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 45  மற்றும் 70 ல் கணேசபுரம்  சுரங்க பாதையின் மேல் ரூபாய் 142  கோடி  மதிப்பில்  இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் - 678 மீ, பாலத்தின் அகலம்  - 15.20 மீ, பணியின் காலம் - 24 மாதங்கள். மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 2 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள், தினசரி 40 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

* தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு - 41ல், மணலி சாலையில் இரயில்வே சந்திக்கதவு  2 ந-ன் குறுக்கே, ரூபாய் 96.04  கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் - 840 மீ, பாலத்தின் அகலம்  - 8.4 மீ, பணியின் காலம் - 24 மாதங்கள். மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 1.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தினசரி 25 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

இந்நிகழ்ச்சிகளில், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி (தியாகராய நகர்), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), திரு.தாயகம் கவி (திரு.வி.க.நகர்), ஜே.ஜே.எபினேசர் (ஆர்.கே.நகர்), .ஐட்ரீம் ஆர்.மூர்த்தி (இராயபுரம்), மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர்கள் தா.இளைய அருணா (நகரமைப்பு), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு (ம) நிதி), நே.சிற்றரசு (பணிகள்), இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.சிவகுரு பிரபாகரன், மண்டலக்குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, நேதாஜி உ. கணேசன், சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள், தலைமைப் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai , Ministers laid the foundation stone for the construction of 3 new bridges at an estimated cost of Rs.369.04 crore in Chennai!
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...