×

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் 2 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் 2 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த தடயவியல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினார். மாணவி மரண வழக்கின் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற கோரிய தாயார் மனுவுக்கு சிபிசிஐடி பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இவருடைய மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையுடன் அவருடைய தந்தை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கவேண்டும் என்று மாணவியின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; மாணவி மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், அவர் பயன்படுத்திய செல்போன் ஆய்வு செய்யப்பட்ட தடயவியல் அறிக்கை  பெறப்பட்டதாகவும், வழக்கின் இறுதி அறிக்கை 2 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சற்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மாணவி மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழுக்கு மாற்ற கோரிய தாயாரின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என மாணவின் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி வழக்கு விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


Tags : Kolakkuruchi School ,iCord , Kallakurichi school girl death case, final report in 2 weeks, police information in court
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் மீதான அவதூறு...