உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் எனது இதயமார்ந்த உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்: விஜயகாந்த் அறிக்கை..!

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளா இருந்து, தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள் முன்னேற வேண்டுமென்றால் அதற்குரிய தகுதிகளை பெற சமூகம், அரசியல், பொருளாதாரம் இவை அனைத்திலும் அவர்கள் முழு பங்குபெற வேண்டும்.

மனித இனத்தை பாதுகாப்பது தாய்க்குலங்களே, அந்த தாய்குலங்களை போற்றும் வகையில் அவர்கள் நலன் கருதி கொண்டாடப்படுவதே உலக மகளிர் தினம் ஆகும். ஆண்களுக்கு, பெண்கள் அடிமையில்லை, பெண்களுக்கு, ஆண்கள் அடிமையில்லை. இருபாலரும் ஒருசேர நட்புணர்வோடு புரிதல்கள் இருக்க வேண்டும் என்பதே முன்னோர்கள் காட்டிய வழியாகும். ஆண், பெண் உறவு நட்பின் அடிப்படையில் அமைகிறபொழுது, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை இன்றைய காலகட்டத்தில் இருபாலரும் ஒரு சேர சமாளிக்க வேண்டியுள்ளது. தேமுதிக சார்பாக இதுவரைக்கும் பல திட்டங்களை பல பெண்களுக்காக கழகத்தின் மூலமாக செய்யப்படுள்ளது.

அவற்றில் பெண்கள் நாட்டின் கண்கள்” என்கிற உன்னத திட்டத்தை தனிகட்சியாக செய்து அதை சரித்திர சாதனையாக மாற்றியது தேமுதிக. அதேபோல பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தையல் இயந்திரம், சிறு கடைகள் வைத்துக்கொடுப்பது, கணினி பயிற்சி மையம், கல்வி உதவி, திருமண உதவி, மருத்துவ உதவி இதுபோன்று பலதரப்பட்ட வகையில் பெண்களுக்கு உதவிகரம் புரிந்துள்ளது தேமுதிக. பெண்களுக்கென்று கழகத்தில் மகளிர் அணியை உருவாக்கி அவர்களுக்கு என்று தனி சீருடை அமைத்து அரசியலில் சமபங்கு அளித்த ஒரே கழகம் தேமுதிக.

எனவே பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் என்றைக்கும் தேமுதிக இருக்கும். தற்போது அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிலிண்டர் விலை உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச பேருந்துகளில் பெண்களை கீழ்த்தரமாக நடத்துவது, ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்காமல் அலைக்கழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகளை பெண்கள் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். கல்வி வேலைவாய்ப்பை தாண்டி அரசியலிலும் பெண்கள் தடம் பதிக்க வேண்டும். பெண்கள் சுயமாக சம்பாதித்து, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளில் இருந்து விடப்பட்டு, சம உரிமையோடு அனைத்து நலமும், வளமும் பெற வேண்டும் என்று இந்த நன்நாளில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: