சின்னமனூர் அருகே பார்சல் சர்வீஸ் கடையில் பட்டாசு வெடித்து தீவிபத்து-அண்ணன், தம்பி படுகாயம்

சின்னமனூர் : சின்னமனூர் அருகே பார்சல் சர்வீஸ் கடையில் பட்டாசு பாக்ஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைக்குள் தூங்கிக் கொண்டிருந்த  அண்ணன், தம்பி படுகாயமடைந்தனர்.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி வெண்ணியார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபப்பிரகாஷ். இவர் சின்னமனூர் பஸ் நிலைய வணிக வளாகத்தில் பார்சல் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர்களான வெண்ணியார் எஸ்டேட்டை சேர்ந்த அபினேஷ், அஸ்வின் இருவரும் நேற்று முன்தினம் சின்னமனூருக்கு வந்துள்ளனர்.

அங்கு சொந்த வேலைகளை முடித்து விட்டு, இரவு ஜெபப்பிரகாஷ் பார்சல் சர்வீஸ் கடையில் தங்கியுள்ளனர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு பார்சல் சர்வீஸ் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், தூங்கிக் கொண்டிருந்த அபினேஷ், அஸ்வின் இருவரும் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு போராடினர். தகவலறிந்து வந்த சின்னமனூர் தீயணைப்பு துறையினர்,

ேபாலீசார் இணைந்து ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 40 சதவீதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் வெளியூர் அனுப்ப இருந்த பைக், மெத்தை உள்ளிட்ட பலவிதமான பார்சல் பொருட்கள் எரிந்து நாசமாகின. தீவிபத்து தொடர்பாக போடி டிஎஸ்பி பெரியசாமி நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்தார்.

விசாரணையில் அண்ணன், தம்பி இருவரும் கடைக்குள் கொசுவர்த்தி சுருள் பற்ற வைத்துள்ளனர். அந்த சுருள் அருகில் இருந்த மெத்தையில் பிடித்து பட்டாசு பண்டலில் பற்றியதில், பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

Related Stories: