×

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்): பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடனும் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும். ராமதாஸ் (பாமக நிறுவனர்): வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கலாம். அத்தகைய கனவு சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): தற்போதைய கணினி யுகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கின்றது. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): பெண்கள் தினத்தில், பாலின வேறுபாடுகளையும், அடக்குமுறைகளையும் ஆதரித்து வரும் வகுப்புவாத சக்திகளின் கரங்களில் சிக்கியுள்ள நாட்டின் அதிகாரத்தை மீட்கும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து, முன்னேறுவோம் என உறுதி ஏற்போம். அன்புமணி (பாமக தலைவர்): ஆண்களைவிட பெண்களுக்குத்தான் போர்க்குணம் அதிகம். பெண்களை அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க அனுமதிக்க வேண்டும்.

அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் ஆண்கள் துணை நிற்க வேண்டும் என்ற உறுதிமொழியை மகளிர் நாளில் நாம் அனைவரும் ஏற்க வேண்டும். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தமிழ் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் மன நிம்மதியாக, மகிழ்ச்சியாக, குடும்பத்திற்காக, நாட்டிற்காக தாங்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பான பணியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள இறைவன் துணை நிற்க வேண்டுவோம். வி.கே.சசிகலா: அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து, புதிய சரித்திரம் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): உலக மகளிர் தினத்தன்றில் மட்டுமின்றி என்றென்றும் பெண்களைப் போற்றினால் மட்டுமே இந்த உலகம் அன்புடனும், அறத்துடன் திகழும் என்பதை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழக தலைவர்): பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடப்படும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : International Women's Day , Greetings from political party leaders on International Women's Day
× RELATED உலக மகளிர் தினத்தை முன்னிட்டு...