×
Saravana Stores

பாஜக - அதிமுக மோதல் முற்றுகிறது; நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கிய கட்சி பாஜக: அண்ணாமலைக்கு சிங்கை ராமச்சந்திரன் பதிலடி..!

சென்னை: நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை விமர்சிப்பதா என அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இருந்து வெளியேறினார். பின்னர் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனால், அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவர்கள் மற்றும் பாஜகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் நடவடிக்கையில் எடப்பாடி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழக பாஜக ஐடி  விங் செயலாளர் திலிப் கண்ணன் நேற்று பாஜகவில் இருந்து விலகினார். அவரும் பாஜக தலைவர்  அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை தெரிவித்தார். பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

மேலும் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதியும் அதிமுகவில் இணைந்தார். இதே போல திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் விஜயும் அதிமுகவில் இணைந்தார். அப்போது அண்மையில் அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாஜகவில் இருந்து வெளியேறுபவர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருவது பாஜக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பாஜக நிர்வாகிகள் அதிமுகவுக்கு தாவுவதால் இரு கட்சிகளிடையேயான மோதல் முற்றுகிறது.

இந்நிலையில் பாஜகவில் இருந்து இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களை இழுக்கும் நிலையில் அதிமுக உள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்தார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார். அதிமுகவை அண்ணாமலை விமர்சித்த நிலையில், அண்ணாமலைக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. பாஜகவினரை அதிமுக திட்டமிட்டே இழுப்பதாக கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஐ.டி. அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கிவந்த நிலையில், 2021ல் பாஜக எப்படி எம்.எல்.ஏ.க்களை வென்றது என்பதே இதற்கான பதில். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே. அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என அண்ணாமலை கூறுவது நகைப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார். 


Tags : RAMACHANDRAN ,ANNAMALE , BJP-AIADMK clash ends; BJP, the party that got less votes than NOTA: Singhai Ramachandran's response to Annamalai..!
× RELATED தமிழக அரசு உறங்கவில்லை; விழித்துக்...