×

புழல் காவாங்கரையில் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் ஆய்வு

புழல்: புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சென்னை புழல், காவாங்கரையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு 328 இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 932 பேர் வசிக்கின்றனர். இம்முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு சார்பில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்ட விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி மையத்தையும் அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இலங்கை தமிழர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அவரிடம், எங்களுக்கு இங்கு புதிதாக வீடு கட்டித் தரவேண்டும். குடிநீர், கழிவறை, ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்து வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஸ்தான் உறுதியளித்தார். இந்த ஆய்வில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் நந்தகோபால், வட்டாட்சியர் நித்யானந்தம், மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன், வட்ட செயலாளர் குப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Puzhal Kawangarai Rehabilitation Camp , Ministerial Inspection of Puzhal Kawangarai Rehabilitation Camp
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...