நடிகை பலாத்கார வழக்கில் கைதான பல்சர் சுனிலுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் உள்ள வீட்டில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றார். அப்போது ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக நடிகையின் முன்னாள் டிரைவரான பல்சர் சுனில் என்ற சுனில்குமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் உள்பட அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபராக கருதப்படும் பல்சர் சுனிலுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பலமுறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தபோதிலும் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பல்சர் சுனில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற உயர்நீதிமன்றம் பல்சர் சுனிலின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: