×

5வது முறையாக நெய்பியூ ரியோ முதல்வராக பதவியேற்றார்: நாகாலாந்தில் முதன்முறையாக எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டசபை!!

கொஹிமா: நாகாலாந்தில்,நெய்பியூ ரியோ 5வது முறையாக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் இல.கணேசன்,ரியோவுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். கொஹிமா நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், தடிதுய் ரங்காவ், ஜெலியாங், யாந்துங்கோ பாட்டன்ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஜி கைடோ அயே, ஜேக்கப் ஜிமோமி, கேஜி கென்யே, பி பைவாங் கொன்யாக், மெட்சுபோ ஜமீர், டெம்ஜென் இம்னா அலோங், சிஎல் ஜான், சல்ஹவுடுவோனுவோ க்ரூஸ் மற்றும் பி பாஷாங்மோங்பா சாங் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 25 இடங்கள், பாஜக 12 இடங்கள் என மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. பிற அரசியல் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் 7 இடங்களிலும், என்.பி.பி. 5  இடங்களிலும், நாகாலாந்து மக்கள் கட்சி ஐந்து இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, நாகா மக்கள் முன்னணி, ராம்தாஸ் அதவாலேவின் இந்திய குடியரசு கட்சி, ஐக்கிய ஜனதா தளம் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. மேலும், சுயேட்சைகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.

நாகாலாந்து மாநிலத் தேர்தலில் இதற்குமுன் இத்தனைக் கட்சிகள் வெற்றி பெற்றது கிடையாது. பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால் நாகாலாந்தில் மீண்டும் அனைத்து கட்சி ஆட்சி அமையவுள்ளது. கடந்த முறை ஆட்சியமைத்த பிறகே எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை உருவானது. ஆனால், இம்முறை ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Naibyu Rio ,Nagaland , Naibyu Rio, Chief Minister, Nagaland
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...