×

திருமங்கலம் கரடிக்கல் கிராமத்தில் 16ம் நூற்றாண்டின் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு-தமிழ் எழுத்துகளும் உள்ளன

திருமங்கலம் : திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் தமிழ் எழுத்துகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுந்தர் தனது கிராமத்தில் பழமையான சிற்பம் இருப்பதாக தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமணமூர்த்தி, அஷ்வத்தாமன், ஆய்வாளர் ஆனந்தகுமரன் அடங்கிய குழுவினர் கரடிக்கல் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஊரின் மேற்குபகுதியில் விவசாய நிலத்தில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் கி.பி 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் வீரன் சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில், சங்ககாலம் முதல் இன்று வரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை முக்கிய பங்காகவே உள்ளது. நடுகல் என்பது போரில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக்கல்.தற்போது கிடைத்துள்ள நடுகல் சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ தடிமன் கொண்ட தனி பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவம் முகம் தேய்ந்த நிலையிலும், இடது கையில் கேடயம், வலது கையில் நீண்ட வாளுடன் காட்சியளிக்கிறது. காதணி, கழுத்தில் சரபளிசவடி, பதக்கம் போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரசங்கிலியும் காணப்படுகிறது.

சன்னவீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். வீரனின் இடுப்பில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்கள், கை, கால்களில் வீரக்கழல் அணிந்து முன்னங்காலை ஊன்றி போருக்கு புறப்பட்டுச்செல்வது போன்று காணப்படுகிறது.வீரனின் வலதுபுறம் பெண் சிற்பம் தேய்ந்த முகத்துடன் நீண்ட காதுகளில் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையும், ஆடைகளுடன் வலது கையை தொங்கவிட்டு, இடது கை வீரனை பின்தொடர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டின் மேல் பகுதியில் நீண்ட பெரிய எழுத்துகள் தேய்ந்தநிலையில் காணப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் சாந்தலிங்கம் உதவியுடன் படிக்கப்பட்டது.
அதில் கடைசி வரியான பெற்றான் என்பதை மட்டுமே வாசிக்க முடிந்தது. மற்ற எழுத்துகள் அனைத்தும் தேய்மானம் கொண்டு இருப்பதால் அதன் பொருள் அறியமுடியவில்லை.
இந்த பகுதியில் போரில் சிறப்பாக செயல்பட்டு உயிரிழந்த வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். தற்போது பொதுமக்கள் வேட்டைக்காரன் சாமி என இதனை வழிபட்டு வருகின்றனர் என்றார்.

Tags : Tirumangalam Karatikkal , Tirumangalam : A 16th century middle stone sculpture with Tamil script has been found in Karatikkal village near Tirumangalam.
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...