வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம்

*ஓபிஎஸ் அணி குழப்பம்-பாஜவுடன் கூட்டணியை தொடருமா? அதிமுக

குன்னூர் :  குன்னூர், வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். இதனால் இந்த தேர்தலில் நிற்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுபாட்டில் சுமார் 64  கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ளன. இவை அனைத்தும் ராணுவத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

இதில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வார்டு‌ உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். இந்தியா முழுவதும் சுமார் 57 கன்டோன்மெண்ட் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.  அதன்படி ஏப்ரல் 30-ம்தேதி தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் மற்றும் சென்னை பல்லாவரம்‌ ஆகிய கன்டோன்மெண்ட்  பகுதிகள் உள்ளது.  

குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்டில் 7 வார்டுகள் உள்ளன. இங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக, அதிமுக, பாஜ உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட ஆயத்தமாகிவருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 22-ம் தேதி வேட்பு தாக்கல் நடைபெறும். தொடர்ந்து 28-ம் தேதி  வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக புதிய வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 7 வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. துணை தலைவராக அப்போதைய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான பன்னீர் செல்வத்தின் ஆதரளவாளரும் அந்த அணியின் மாவட்ட செயலாளருமான பாரதி இருந்தார்.தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்றுள்ளது. இதனால் பன்னீர் செல்வத்தின் அணியினர் குழப்பத்தில் உள்ளனர். மேலும் தேர்தலில் எந்த கட்சியில் நின்று போட்டியிடுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

திமுகவினர் இந்த முறை 7 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்று அதிரடியாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திமுக மாவட்ட செயலாளர் முபாரக் தீவிரம் காட்டி வருகின்றார்.  அதிமுகவினர் யாரை தேர்தலில் நிறுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். மேலும் ஓ. பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலாளர் பாரதியார், எடப்பாடி பழனிசாமியுடன் செல்வதா? அல்லது பாஜவில் இணைவதா? என பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் கன்டோன்மெண்ட்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலை போன்று களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: