அய்யலூர் : அய்யலூர் பகுதியில் மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே ஸ்ரீரங்க கவுண்டனூர், தோப்புப்பட்டி, பாலக்குறிச்சி, பாண்டியனூர், வடுகபட்டி, சித்துவார்பட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்குகள், பட்டிகளுக்குள் நுழைந்து ஆடுகளை கடித்து ரத்தங்களை குடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வடுகபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் முருகன், முனியாண்டி, பெருமாள் ஆகியோரது பட்டிக்குள் புகுந்து மர்ம விலங்குகள், ஆடுகளை கடித்து குதறின. இதில் சம்பவ இடத்திலேயே 10 ஆடுகள் இறந்தன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சுற்றித்திரியும் மர்ம விலங்குகள் தோட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறி வருகின்றன. விவசாயத்தில் ஏற்கனவே நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் கால்நடைகள் வளர்ப்பு ஓரளவுக்கு உதவியாக இருந்தது.ஆனால் தற்போது ஆடுகளும் மர்ம விலங்குகளால் தாக்கப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். மேலும் மர்மவிலங்கு நடமாட்டத்தால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு தரவேண்டும்’’ என்றார்.
