×

அடுத்த 30 ஆண்டுகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை பெருநகருக்கான புதிய போக்குவரத்து திட்டம் தயாரிப்பு: ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை

சென்னை: சென்னை பெருநகருக்கான புதிய போக்குவரத்து திட்டம் தயாரிக்கும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரைவில் தொடங்க உள்ளது. இதில் ‘லைட் மெட்ரோ’ என்ற பெயரில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த ட்ராம்  வண்டியை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பரப்பளவுக்கு புதிய போக்குவரத்து திட்டத்தை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்த போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

குறிப்பாக, இந்த போக்குவரத்து திட்டம் குறைந்த கார்பனை வெளியிடும் வகையிலும், குறைந்த அளவு காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை உண்டாக்கும் வகையிலும் வடிவமைக்கப்படும்.
மேலும், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள், கொரோனா போன்ற பெருந்தொற்று ஆகிய காலங்களில் எந்த தடையும் இன்றி செயல்படும் வகையிலான மீள் திறனுடன் வகையில் இருக்கும். இதைத் தவிர்த்து அனைவரும் எளிதில் அணுகும் வகையிலும், நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற வகையிலும், சாலை விபத்துகள் இல்லாத பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான போக்குவரத்து திட்டமாக இது இருக்கும்.

இந்த திட்டத்தை தயார் செய்யும் பணிக்கான ஒப்பந்தம் விரைவில் வழங்கப்படவுள்ளது. இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து, பொது போக்குவரத்தை மேம்படுத்துதல், சாலை விபத்துகளை குறைத்தல் உள்ளிட்டவை தொடர்பான விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது மெட்ரோ ரயில் இயங்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் ‘லைட் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும், பல்வேறு வகையான போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது.

லைட் மெட்ரோ என்பது ட்ராம் வண்டியின் நவீன வடிவம் ஆகும். தற்போது உள்ள மெட்ரா ரயில் திட்டங்களில் உயர் மட்ட பாதை அமைக்க ஒரு கி.மீட்டருக்கு ரூ.200 முதல் ரூ.250 கோடியும், சுரங்கப்பாதை அமைக்க ரூ.500 முதல் ரூ.550 கோடியும் ஆகும். ஆனால், இந்த லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100 கோடி தான் ஆகும். எனவே, இந்த மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai Metropolis , Preparation of a new transport plan for Chennai Metropolis considering the next 30 years of development: Integrated Transport Group Action
× RELATED ஊர்க்காவல் படையினருக்கு...