×

அரசு பஸ்கள் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

சென்னை: அரசு பஸ்கள் தனியார்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் அரசு பஸ்கள் இயங்கும் சூழலில், தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்ற செய்தி, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக உலக வங்கி பல்வேறு கருத்துரைகளை வழங்கி உள்ளது.  சென்னையில் தனியார் பஸ் இயக்குவது தொடர்பாக 2021ம் ஆண்டு பிப்.26ம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணைபடி, போக்குவரத்துக் கழகத்தில், கிராஸ் காஸ்ட் கான்டிராக்ட் முறையில் மாநகரில் 500 பேருந்துகளை இயக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை அளிக்க, ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டரை அரசு வெளியிட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட பின் சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கை அடிப்படையில், அரசு முடிவெடுக்கும்.

சென்னை மற்றும் கன்னியாகுமரியில் முழுமையாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் அவர்களுக்கான வழித்தடத்தில் இயக்குகின்றனர். உலக வங்கி வழங்கியுள்ள கருத்துரை என்பது அரசுப்போக்குவரத்துக் கழகமும், தனியார் நிறுவனமும் அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது என்பது தான். அரசு பஸ்கள் தனியார்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் ஆய்வு செய்யப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படாது.

சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்து வசதி தேவை என்பதற்காகவே உலக வங்கி கருத்துரை வழங்கியுள்ளது. எந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்து சேவை தேவைப்படுகிறதோ அந்த வழித்தடத்தில் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும். அரசு பேருந்து சேவை நிறுத்தப்படும், பணியாளர்கள் நீக்கப்படுவர் என்பது வந்ததி. மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அறிவிப்பை புரிந்து கொள்ளாமல் தொழிற்சங்கத்தினர் பதற்றமடைந்துள்ளனர். இதேபோன்ற திட்டம் டெல்லி, கேரளா, பெங்களூருவில்  நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Sivashankar , Privatization of Government Buses, Minister Shiv Shankar Scheme,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...