×

சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய அறிவுரை: முதல்வருக்கு விமான போக்குவரத்து அமைச்சர் கடிதம்

டெல்லி: சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய இந்தியவிமான நிறுவங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டானின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  

சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தினை தொடங்கிடத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 11-2-2023 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
 
அக்கடிதத்தில், பினாங்கில் வாழும் தமிழர்கள் குறித்தும், பினாங்கு மற்றும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கும் பினாங்கிற்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்புகளையும், வர்த்தக உறவுகளையும், சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

இந்நிலையில், கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு, தற்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவும், தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், சென்னைக்கும் பினாங்கிற்கும் இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்திடவும், தனது கடிதத்தில்  முதலமைச்சர் கோரியிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடிதத்தினைப் பரிசீலித்த ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது 2-3-2023 நாளிட்ட கடிதத்தில், சென்னை மற்றும் பினாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய விமான நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,Penang, Malaysia ,Aviation ,Minister , Advice to explore feasibility of direct flight from Chennai to Penang, Malaysia: Aviation Minister's letter to PM
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!