புழல் பகுதியில் வாலிபர் கொலை குறித்து 8 பேரிடம் தீவிர விசாரணை

புழல்: புழல் பகுதியில் நேற்றிரவு தனது நண்பருடன் சாலையில் நின்றபடி பேசிக்கொண்டிருந்த ஒரு வாலிபரை 3 பைக்குகளில் வந்த மர்ம கும்பல் சரமாரி வெட்டி கொன்றது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து, சந்தேகத்தின்பேரில் 8 பேரை மடக்கி பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.சென்னை புழல், என்எஸ்கே தெருவை சேர்ந்தவர் ரிதம் (23). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி துர்கா மற்றும் 3 மாத பெண்குழந்தை உள்ளது. இதேபோல் புழல், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் விஜய் (25). இவர், அதே பகுதியில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். விஜய்யும் ரிதமும் நண்பர்கள்.

இந்நிலையில், நேற்றிரவு புழல், லட்சுமியம்மன் 4வது குறுக்கு தெருவில் நண்பர்களான ரிதமும் விஜய்யும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 3 பைக்குகளில் வந்த மர்ம கும்பல், ரிதம்மை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரி வெட்டினர். இதை விஜய் தடுக்க வந்தபோது, அவருக்கும் சரமாரி வெட்டு விழுந்தது. இதில் இருவரும் படுகாயங்களுடன் அலறி சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதை கண்டு 3 பைக்குகளில் மர்ம கும்பல் ஏறி தப்பி சென்றுவிட்டது.

படுகாயம் அமைந்த ரிதம், விஜய் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ரிதம் பரிதாபமாக பலியானார். அவரது நண்பர் விஜய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தகவலறிந்ததும் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசாரை ஆய்வு செய்தனர். இப்புகாரின்பேரில் புழல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகளை அமைத்து மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை புழல், சக்திவேல் நகரை சேர்ந்த டில்லிபாபு (25) உள்பட 8 பேரை சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: